சேந்தமங்கலம்: பொது தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சியை காண்பிக்க வேண்டும் என்பதற்காக, கல்வியில் பின்தங்கிய மாணவர்களை, அரசு பள்ளி தலைமையாசிரியர் கட்டாய இடைநீக்கம் செய்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சேந்தமங்கலம் அடுத்து செல்லப்பம்பட்டியில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, செல்லப்பம்பட்டி, புதன்சந்தை, மின்னாம்பள்ளி, பொட்டணம், ஏளூர், பொம்மைக்குட்டைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி தலைமையாசிரியாக தங்கவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர், பத்து ஆண்டுகளுக்கு மேலாக, இப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். விரைவில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.
செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, படிப்பில் பின்தங்கிய மாணவ, மாணவியரை, வலுக்கட்டமாயமாக வெளியேற்றி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அதற்காக, சிறப்பு வகுப்புக்கு காலதாமதமாக வரும் மாணவர்களுக்கு வருகை பதிவேட்டில் விடுமுறை எடுத்தாற் போல் கணக்கு காட்டி, அவர்களை பள்ளியை விட்டு இடைநீக்கம் செய்துள்ளதாவும், அதேபோல், இதுவரை, பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், இது குறித்து கேட்டால், சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரின், "டிசி"யில், கை வைத்து விடுவேன் என, தலைமையாசிரியர் தங்கவேல் மிரட்டுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, ஏழை மாணவர்களை குறிவைத்தே, இதுபோன்ற நடவடிக்கையை தலைமையாசிரியர் தங்கவேல் மேற்கொண்டுள்ளார். இது, கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய விசாரணை மேற்கொண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வி அளிக்கும் வகையில், மாவட்ட கல்வித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் கூறுகையில், "பள்ளியில் நீண்ட விடுப்பில் சென்ற மாணவர்கள், கடந்த இரண்டு மாதத்துக்கு முன் இடைநீக்கம் செய்யப்பட்டனர். வேண்டுமென்றே ஆஃப்சென்ட் போட்டு நீக்கவில்லை,&'&' என்றார்.
No comments:
Post a Comment