புதிய ரேஷன் கார்டு கிடையாது. ஒரு ஆண்டுக்கு உள்தாள் இணைப்பு.
கோவை: ரேஷன் கார்டுகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் இணைத்து பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள 2 கோடி ரேஷன் கார்டுகள் கடந்த 2011ம் ஆண்டே முடிவுக்கு வந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் இந்தாண்டுக்கு வழங்கவேண்டிய புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக கடையில் பொருட்கள் பெறுவதற்கு வசதியாக ஓராண்டுக்கு செல்லத்தக்க உள்தாள் இணைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு வசதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2ம் கட்டமாக உடற்கூறு பதிவுப்பணி தற்போது நடந்து வருகிறது. இதில் விரல்ரேகைகள், கண் கருவிழி பதிவு செய்யப்படுகிறது. இந்த பணிகள் முடிவுக்கு வர மேலும் பல மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டு காலாவதியாகும் சூழல் ஏற்பட்டதால் புதிய கார்டு வழங்கப்படுமா அல்லது உள்தாள் இணைக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. தற்போது பயன்பாட்டில் உள்ள கார்டில் வரும் 2013ம் ஆண்டுக்கான உள்தாள் இணைத்து செல்லத்தக்க காலத்தை நீடித்து தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் நிர்மலா உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவில் கூறியிருப்பதாவது: தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் செல்லத்தக்க காலம் ஜனவரி 1ம் தேதி முதல் 2013 டிசம்பர் 31 வரை மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்படுகிறது. புழக்கத்தில் உள்ள கார்டுகளில் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் வகையில் உள்தாளை அச்சடித்து ஒட்டவும், அதற்கான ஒரு பக்கத்தில் 2013ம் ஆண்டுக்கும், மறுபக்கத்தில் 2014ம் ஆண்டுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்தாள் அச்சடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 2012க்கான வழங்கல் பதிவேட்டை புதுப்பித்தல் பதிவேடாக பயன்படுத்தி அதில் குடும்ப அட்டைதாரர் அல்லது குடும்ப உறுப்பினர் கையொப்பம் பெற்றுக்கொண்டு குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டி 2013ம் ஆண்டுக்கான புதுப்பித்தல் முத்திரை பதிவு செய்யப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உத்தரவை அரசு வெளியிட்டுள்ள போதிலும் மாவட்டங்களில் உள்தாள் இணைப்பு பணிகள் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தான் துவங்கும் என தெரிகிறது.
No comments:
Post a Comment