அசுத்தம் செய்தால் ரூ.500 அபராதம்: 
ரயில்வே எச்சரிக்கை.


சேலம்: "ரயில் நிலையங்களில், குப்பை கொட்டுதல், சமைப்பது உள்ளிட்ட, பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்படுவோரிடம், 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும்' என, தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய ரயில்வே விதிகளின்படி, ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகள், ரயில் தடங்கள், ரயில்கள் மற்றும் ரயில்வே இடங்கள் ஆகியவற்றில், அசுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

அதன் விபரம் வருமாறு:
* அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற ரயில்வே இடங்களில் மற்றும் ரயில்களில் குப்பை போடுவது.
* அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற ரயில்வே இடங்களில் சமைப்பது, குளிப்பது, எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, அசுத்தப்படுவது. 
* சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் தவிர ரயில் பெட்டிகள் உள்ளிட்ட மற்ற ரயில்வே இடங்களில் போஸ்டர் ஒட்டுவது, வாசகங்கள் எழுதுவது மற்றும் படங்கள் அல்லது பிற வாசகங்கள் வரைவது.
* ரயில்வே இடங்களை மற்ற எந்த விதத்திலும் அசுத்தப்படுத்துவது.
மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடமும், மேற்கண்ட விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே அதிகாரிகள் மூலம், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். பொதுமக்கள், ரயில்வே இடங்களை சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைப்பு தர வேண்டும். 

ரயில் நிலையங்களில் செயல்படும் அங்கீகாரம் பெற்ற வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள், குப்பைக்கூடை வைத்து, அதன் மூலம் குப்பைகளை சேகரித்து சரியான முறையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment