அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரி சீருடை.
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தொடக்கக் கல்வி பாடத் திட்டத்தில், ஜாதியற்ற சமூகம் தொடர்பான பாடமும், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், சைபர் கிரைம் குறித்த பாடமும் சேர்க்கப்படும் என்றார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள், எஸ். பி., க்கள் கலந்து கொண்ட மாநாடு மூன்றாவது நாளாக நேற்று நடந்தது. இம்மாநாட்டில், மாவட்டங்கள் தோறும் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ். பி., க்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.
இறுதியில், சிறப்பாகச் செயல்பட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு விருதுகளை, முதல்வர் வழங்கினார். மாநாட்டு முடிவில், முதல்வர், மாவட்ட கலெக்டர், எஸ். பி., க்களுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன், மாவட்ட வாரியாக, 343 அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அவர் பேசும் போது, " மக்கள் வாழ்க்கையில் முன்னேறத் தேவையான வாய்ப்புகளையும், நம்பிக்கையையும் வழங்குவதில், நாம் உதவி செய்ய வேண்டும். அந்த இலக்கை அடைய, இந்த மாநாடு மூலம், பல்வேறு ஆலோசனைகள், திட்டங்களாக வடிவம் பெற்றுள்ளன,&'&' என்றார்.
தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படும். ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதி பள்ளி மாணவர்களுக்கு, கம்பளி இணைந்த சீருடை வழங்கப்படும்.
தொடக்கக் கல்வி பாடத் திட்டத்தில், ஜாதியற்ற சமூகம் தொடர்பான பாடமும், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், சைபர் கிரைம் குறித்த பாடமும் சேர்க்கப்படும்.
விருதுநகர், தர்மபுரி, தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன என்றார்.
No comments:
Post a Comment