டி.இ.டி. வெற்றியாளர்களிடம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு.
சென்னை: சமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற, ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணி, டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. இதில், தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் தேர்வை உடனடியாக ரத்து செய்ய, டி.ஆர்.பி.,யும், அவர்களை வேலையில் இருந்து, டிஸ்மிஸ் செய்வதற்கு, கல்வித்துறையும் முடிவு செய்துள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி. இ. டி., தேர்வு வழியாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 18 ஆயிரம் பேர், சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, 13 ம் தேதி, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. வழக்கமாக, பணி நியமன ஆணை வழங்குவதற்கு முன், பலமுறை, தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
இந்த முறை நேரம் இல்லாததால், மாவட்டங்களில் நடந்த சரிபார்ப்புடன், அப்படியே, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது, சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. சரியான கல்வித் தகுதி இல்லாத பல பேர், பணி ஆணை பெற்றிருக்கலாம் என, டி. ஆர். பி., சந்தேகிக்கிறது. அப்படி, தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் தேர்வு ஆணையை, உடனடியாக ரத்து செய்ய, டி. ஆர். பி., திட்டமிட்டுள்ளது.
அதே போல், அவர்களை, வேலையில் இருந்து, " டிஸ்மிஸ்" செய்வதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இதுபற்றி டி. ஆர். பி., வட்டாரங்கள் கூறியதாவது:
சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடப்பதற்கு முன், எந்தெந்தப் பாடங்களை, வேலைக்குத் தகுதியாக ஏற்க வேண்டும்; எந்தப் பாடங்கள் தகுதியில்லை மற்றும் தமிழ்வழியில் படித்தவர்களை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் குறித்து, தெளிவான சுற்றறிக்கையை, சான்றிதழ் சரிபார்ப்பில் ஈடுபட்ட குழுவினருக்கு, அனுப்பியிருக்க வேண்டும்.
இதை, செய்யாததால், ஒவ்வொரு குழுவும், ஒவ்வொரு அணுகுமுறையுடன், சான்றிதழ்களை சரிபார்த்துள்ளது. பி. எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி. காம்., படித்தவர்களை எல்லாம், தேர்வில், " செலக்ட்" ஆக்கியுள்ளோம். இவர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, தகுதியில்லாதவர்கள். அதனால், மீண்டும் ஒருமுறை, சரிபார்க்கும் பணி நடக்கிறது. இவ்வாறு, டி. ஆர். பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
பள்ளிக் கல்வி வட்டாரத்தினர் கூறியதாவது: டி. இ. டி., வழி நியமனம், அவசர கதியில் நடந்தது. அதனால் தான், சான்றிதழ்களை, மீண்டும் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி, இரண்டு மாதம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், அதுவரை, சம்பளத்தை நிறுத்தி வைக்கலாமா எனவும், ஆலோசித்து வருகிறோம். பணி நியமன ஆணையில், " இந்தத் தேர்வு, தற்காலிகமானது எனவும், தகுதியற்றவர்கள் என, கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக, பணி நியமன ஆணை ரத்து செய்யப்படும்" எனவும் தெரிவித்துள்ளோம். எனவே, தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், கண்டிப்பாக, பணியில் இருந்து உடனடியாக, " டிஸ்மிஸ்" செய்வோம். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின், தகுதியில்லாதவர்கள் எத்தனை பேர் பணியில் சேர்ந்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.
No comments:
Post a Comment